துளசி எமதர்மனின் மகள். தன்னுடைய சிறு வயதில் துளசி ஒரு தீவிர விஷ்ணு பக்தையாக இருந்து வந்தாள். அவர் தினமும் கங்கை நதிக்கரைக்கு சென்று நீராடிவிட்டு கங்கை நதிக்கரையில் உள்ள விஷ்ணுவை வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஒருமுறை கங்கை நதிக்கரையில் அடுத்த பக்கத்தில் ஒரு அழகான யானை முகத்துடன் ஒருவர் தியானம் செய்பவரை துளசி எதேச்சையாக பார்த்தார்.

அந்த விநாயகரின் அழகில் மயங்கி நேரடியாக விநாயகரிடம் சென்று நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று துளசி மிகவும் வெளிப்படையாக கேட்டார். உடனே விநாயகர் நான் ஈஸ்வரனின் மகன், என்னுடைய தாய் எப்படிப்பட்டவரோ அதேபோன்ற குணத்துடனும், பண்புடனும் இருக்கும் பெண்ணை தான் நான் திருமணம் செய்வேன், என்னால் உங்களை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று சொன்னார்.

இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத துளசி நீங்கள் நினைப்பதை போன்ற பெண் இல்லாமல் அதற்கு நேர்மறையான பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்கள் என்று சாபமிட்டார். இதனால் கோபமடைந்த விநாயகர் நீ ஒரு அசுரனை தான் திருமணம் செய்து கொள்வாய் என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தின் விபரீதத்தை உணர்ந்த துளசி விநாயகரிடம் கெஞ்சி மன்றாடினார்.

தயவு செய்து இந்த சாபத்திற்கு விமோசனம் கொடுங்கள் என்று கேட்டார். துளசியை கண்டு தன் மனதை மாற்றிக்கொண்டார் விநாயகர். நீ உன்னுடைய மறுஜென்மத்தில் புனிதமான துளசி செடியாக மறுபிறப்பு எடுப்பாய் என்று வரம் கொடுத்தார். விஷ்ணுவுக்கு இந்த துளசியை தான் முதன்மை பூஜை பொருளாக கொண்டு எல்லோரும் பூஜிப்பார்கள் என்று வரம் கொடுத்தார். எப்போதும் நீ இந்த விநாயகனை விட்டு தள்ளி இரு, அது தான் நம் இருவருக்கும் நல்லது என்றும் விநாயகர் துளசியிடம் சொன்னார். அதனால் தான் விநாயகருக்கு பூஜை செய்யும் போது துளசியை பயன்படுத்த மாட்டார்கள்.
