சைவ கோவில்களில் மிகப்பெரிய ஆலயம் இதுதான். கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்று இந்த கோவிலை சொல்லுவார்கள். உலகின் மிகப்பெரிய தேர் இந்த திருவாரூர் தேர் தான். இந்த திருவாரூர் ஆலயத்தில் சோழப் பேரரசர்கள், நாயக்கமன்னர்கள், மராட்டிய மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்.

தில்லை நடராஜர் ஆலயத்தை விட இந்த திருவாரூர் தியாகராஜர் ஆலயம் பழமையானது. இந்த திருவாரூரில் பிறந்தால் முக்தி அடைவார்கள் என்று சொல்கிறார்கள். கோவிலின் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற அனைத்திலும் சிறந்தது தான் இந்த திருவாரூர் தியாகராஜர் ஆலயம் என்று சொல்லப்படுகிறது.

சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் அருள்வாழ்வு மலர்ந்ததும் இந்த ஊரில் தான். இந்த தியாகராஜ சாமி கர்ப்பக்கிரக விமானத்துக்கு தங்கத் தகடு போர்த்தி முதலாம் ராஜேந்திர சோழன் குடமுழுக்கு செய்ததாக இக்கோவிலின் கல்வெட்டுகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் என்றால் அருமையான ஊர், அறிய ஊர் என்பது பொருள். படைக்கும் தெய்வம் பிரம்மன் நாள்தோறும் சிவபூஜை செய்து வாழ்ந்த தளமும் இதுதான்.
