இந்தியாவில் உள்ள மற்ற எல்லா மாநிலங்களை விட நம் தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் ஆலயங்கள் அமைந்துள்ளது. கடவுள் இல்லைன்னு சொல்றங்களும் நம்ம தமிழ்நாட்டில் தான் இருக்காங்க, அந்த கடவுளுக்காக அதிக நேர்த்திக்கடன் செய்பவர்களும் நம்ம ஊரில் தான் இருக்காங்க. ஒவ்வொரு கோவிலுக்கு என்று பல வித்யாசமான பிரார்த்தனைகள் பக்தர்களால் கடவுளுக்கு செய்யப்படுகின்றன.
அந்த மாதிரியான ஒரு வித்யாசமான கோவிலை பற்றியும், அங்கு செய்யும் ஒரு வித்யாசமான பிரார்த்தனை பற்றியும் இங்கு பார்க்கலாம். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் என்னும் கிராமத்தில் குடமுருட்டி ஆற்றங்கரையில் பலநூறு ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மஹா மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்று கிழமை அன்று பாடைகட்டி திருவிழா இங்கு மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதாவது உடல்நலம் பாதிக்கப்பட்ட நோயில் இருந்து மீளமுடியாத பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து தங்கள் நோய் குணமாக வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள். அவர்களின் பிரார்த்தனை நிறைவேறி நோயில் இருந்து குணமாகிவிட்டால் பாடை கட்டி அந்த பாடையின் மீது பிணம் போல அசைவற்று படுத்துக்கொள்வார்கள். பிணத்துக்கு செய்யவேண்டிய எல்லா சடங்குகளையும் செய்வார்கள்.
ஆற்றங்கரையில் இருந்து பாடையின் மீது அந்த பிரார்த்தனை செய்பவரை பிணம் போல வைத்து சடங்குகளை செய்துவிட்டு மாரியம்மன் கோவிலுக்கு நான்கு பேர் பிணம் போல தூக்கி வருவார்கள். மாரியம்மன் கோவிலை மூன்று முறை சுற்றி வந்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதை பக்தர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். வருடந்தோறும் பங்குனி மாதம் இரண்டாம் ஞாயிறு அன்று இந்த பாடை கட்டும் திருவிழா இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த நாளில் இங்கு வந்து தங்களின் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.