ஒரு காலத்தில் திருப்போரூரில் சுயம்பு வடிவாக தோன்றிய முருகன் சிலை மண்ணில் புதையுண்டு பனைமரத்தால் மூடப்பட்டிருந்தது. இதை பற்றி யாருக்கும் தெரியவில்லை. மதுரையில் வசித்து வந்த சிதம்பர ஸ்வாமிகள் கனவில் முருகப்பெருமான் தோன்றி பனை மரத்தால் மூடப்பட்ட முருகன் சிலை பற்றிய தகவல்களை கொடுத்துள்ளார்.

பின்னர் சிதம்பர ஸ்வாமிகள் இங்கு வந்து பனை மரத்துக்கு கீழே புதையுண்டு இருந்த சுயம்பு வடிவிலான முருகப்பெருமானின் சிலையை மீட்டு இங்கு முருகப்பெருமானுக்காக கோவில் எழுப்பினார். முருகப்பெருமான் சுயம்பாக தோன்றியதால் இங்குள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்ய மாட்டார்கள். புனுகு மட்டுமே சாத்துவார்கள்.

சிதம்பர ஸ்வாமிகள் முருகப்பெருமானின் சிலையை மீட்டெடுக்கும்போது பனைமரத்தால் செய்த ஒரு பாத்திரத்தால் முருகப்பெருமான் மூடப்பட்டிருந்தார். இந்த பாத்திரம் இன்னமும் இந்த கோவில் நிர்வாகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. அட்சய பாத்திரத்தை போல இந்த பனை மர பாத்திரம் செல்வம் தரும் என்பது ஐதீகம். நைவேத்தியத்திற்கான அரிசியை இந்த பாத்திரத்தில் வைத்திருப்பார்கள்.
