திருப்பதி சென்று வரும் பக்தர்கள் அனைவரும் நிச்சயம் திருப்பதி பிரசாதமான லட்டை வாங்கிவருவார்கள். சில கோவில் பிரசாதத்தை கூட சிலர் விரும்பாமல் இருக்கலாம். ஆனால் திருப்பதி லட்டு பிரசாத்தை விரும்பாத பக்தர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். வீட்டில் உள்ள சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எல்லோரும் இந்த திருப்பதி லட்டை நிச்சயம் ருசித்து சாப்பிடுவார்கள்.

முதலில் இந்த திருப்பதி கோவிலில் லட்டிற்கு பதிலாக பூந்தியை தான் பிரசாதமாக பக்தர்களுக்கு கொடுத்தார்கள். இங்கு வேலை பார்த்த ஒரு ஐயங்கார் குடும்பத்தினர் தான் திருப்பதியில் கொடுக்கும் பூந்தியை லட்டாக மாற்றி பக்தர்களுக்கு கொடுத்தார்கள். இந்த திருப்பதி லட்டு செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் திருமலையில் 200 பேர் கொண்ட குழு வேலை செய்து வருகிறது.

சாதாரண நாட்களில் ரெண்டு லட்சத்து எண்பதாயிரம் லட்டு தயாரித்து கொடுப்பார்கள். பண்டிகை தினங்களில் 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை லட்டு தயாரித்து கொடுப்பார்கள். இந்த லட்டு வெறும் உணவுப்பொருளாக மட்டுமல்லாமல் திருப்பதி பெருமாளின் முழு அருள் நிறைந்த பிரசாதமாக எல்லா பக்கதர்களாலும் பார்க்கப்படுகிறது. பெருமாள் தரிசனம் செய்து வந்த பிறகு நம் விருப்பத்திற்கு ஏற்ப காசு கொடுத்து லட்டு வாங்கிக்கொள்ளலாம். ஸ்வாமி தரிசனம் முடிந்த பிறகு ஒரு சிறு அளவிலான லட்டு எல்லா பக்தர்களுக்கும் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.
