காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் என்னும் வரலாற்று சிறப்புமிக்க திருத்தலம் அமைந்துள்ளது. இந்த ஊரை திருக்கழுக்குன்றம் என்று சொல்வதற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய கதையே உள்ளது. கழுகுகள் இங்குள்ள சிவபெருமானை தினமும் வழிபட்டு பேறு பெற்றதால் இந்த ஊரை திருக்கழுக்குன்றம் என்று அழைக்கிறார்கள். நான்கு யுகத்திலும் சிவபெருமானை கழுகுகள் வழிபட்டதற்கான சான்றுகள் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன.
இந்த திருக்கழுக்குன்றத்தில் மலையின் உச்சியில் வேதபுரீஸ்வரரும், மலையின் கீழே பக்தவத்சலேசுவரரும் திருத்தலங்களில் அமர்ந்து காட்சி தருகிறார்கள். இந்த திருக்கழுக்குன்றம் மலையில் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை உணர்த்தும் வகையில் நான்கு பாறைகள் அமைந்துள்ளன. அதர்வண வேதத்தின் உச்சியில் வேதகிரீஸ்வரர் அமர்ந்து காட்சி தருகிறார்.
மலையில் தினமும் உச்சி வேளையில் தினமும் இரண்டு கழுகுகள் வந்து உணவு பெற்று செல்கின்றன. கன்னிராசிக்காரர்களுக்கான பரிகாரத் திருத்தலமாக இந்த வேதகிரீஸ்வரர் ஆலயம் விளங்குகிறது. இந்த ஆலயங்களை சுற்றி நிறைய தீர்த்தங்கள் கிடைக்கின்றன. இந்த தீர்த்தங்கள் பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக பயன்படுகிறது. திருவண்ணாமலைக்கு முன்பிருந்தே இந்த ஆலயத்தில் கிரிவலம் நடப்பதாக சொல்லப்படுகிறது. பவுர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து இறைவனை வழிபட்டு கிரிவலம் செல்கிறார்கள். முக்தி கிடைப்பதற்காகவும், மனநிம்மதி கிடைப்பதற்காகவும் இந்த ஆலயத்திற்கு வந்து சிவனை பக்தர்கள் வழிபடுகிறார்கள்.