நமக்கு ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சனைகள் வந்தால் திருப்பதி போயிட்டு வாங்க, நிச்சயம் உங்க வாழ்க்கையில் திருப்பம் உண்டாகும் என்று யாராவது நம்மிடம் சொல்லி இருப்பார்கள் அல்லது நாமே சிலருக்கு உபதேசம் செய்திருப்போம். திருப்பதி திருமலை என்பது வெறும் ஊரின் பெயர் மட்டுமல்ல. நம்முடைய வாழ்வோடும், பண்பாட்டோடும் கலந்த ஒரு பெயர்.

பிரச்சனை வரும்போது நமக்கு நம்பிக்கை தரக்கூடிய ஒரு சொல். எளிய மனிதர்கள் இந்த பூமியில் வாழும் சொர்க்கமும் இந்த திருப்பதி தான். உலகிலேயே சந்திரனின் தாக்கம் அதிகம் உள்ள இடம் ஜப்பான். இதனால் தான் ஜப்பானில் வாழும் மக்கள் எல்லோரும் அதிக அறிவுடனும், திறமையுடனும் இருக்கிறார்கள். நம் இந்தியாவில் சந்திரனின் தாக்கம் அதிகம் உள்ள இடம் திருப்பதி.

சந்திரனின் தாக்கம் அதிகம் திருப்பதியில் இருப்பதால் அங்கு செல்லும்போது நமக்கு மனஅமைதி, மனநிறைவு கிடைக்கிறது. மூலிகைகள் நிறைந்த மலை என்பதால் நம்முடைய உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது. மஹான்கள் நிறைந்த பூமி என்பதால் நமக்கு தேவையான அருளும் நமக்கு கிடைக்கிறது. பெருமாள் ஸ்ரீனிவாசனாக அவதாரம் எடுத்து இந்த பூமியில் காலடி வைத்த இடம் இந்த திருப்பதி தான்.
