புதுச்சேரியில் இருந்து காலப்பட்டு மாத்தூர் சாலையில் வரலாற்று சிறப்புமிக்க முருகன் கோவில் அமைந்துள்ளது. குழந்தை வடிவில் முருகப்பெருமான் இங்கு அருள் பாலிப்பதால் பாலமுருகன் என்று மக்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். பலநூறு வருடங்களுக்கு முன்னர் காடாக இருந்த இந்த இடத்தில் பள்ளம் தோண்டியபோது முருகப்பெருமானின் வேல் கிடைத்துள்ளது.

பின்னர் இந்த இடத்தில் முருகப்பெருமானின் வேலை வைத்து சிறு கோவில் கட்டி வழிபட்டுள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்த இடத்தில் முருகப்பெருமானுக்கு மிகப்பெரிய கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். இந்த ஆலயத்தில் 72 அடி உயர ராஜகோபுரம் அமைத்துள்ளனர்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த ஆலயத்தில் உள்ள அரசமரத்தின் தொட்டில் கட்டி முருகரை வேண்டிக்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சஷ்டி நாட்களில் பாலமுருகரை வேண்டிக்கொண்டு சஷ்டி விரதம் இருந்து பயபக்தியுடன் முருகரை வழிபட்டால் நாம் நினைத்த காரியம் உடனே நிறைவேறும் என்பது ஐதீகம். திருமண வரம் வரம் கைகூட, நாக தோஷம் விலக இந்த ஆலயத்தில் உள்ள நாக தேவதையை வணங்கினால் எல்லா பிரச்சனைகளும் நீங்கிவிடும்.
