மூன்றாம் பிறை அன்று சந்திரனை பார்ப்பது அரிது. அன்றைய தினத்தில் சந்திரன் ஒரு சிறு கீற்று போல காட்சி அளிக்கும். இந்த மூன்றாம் பிறை சந்திரனை பார்ப்பது என்பது விசேஷம். இந்த மூன்றாம் பிறையை சிவபெருமான் தன்னுடைய ஜடா முடியில் அணிந்துள்ளார். எனவே இந்த மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்று தான் சொல்லவேண்டும்.

மூன்றாம் பிறை அன்று சந்திரனை தரிசிக்கும் வேளையில் கையில் காசை வைத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறை சுற்றி வந்து மூன்றாம் பிறையை பெண்கள் வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மூன்றாம் பிறையை தரிசித்தால்ஞாபக சக்தி அதிகரிக்கும், மனக்குழப்பம் நீங்கும், கண் பார்வை அதிகரிக்கும், ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறையை வழிபட்டு வந்தால் சந்திரனின் முழு அருளை பெறமுடியும். மூன்றாம் பிறையை தரிசனம் செய்துவந்தால் சிவனின் சிரசையே வழிபட்டதற்கு சமம். தொடர்ந்து மூன்றாம் பிறை அன்று வழிபாடு செய்து மூன்றாம் பிறையை தரிசிப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் வற்றாத செல்வ செழிப்போடு வாழமுடியும் என்று சொல்லப்படுகிறது. எனவே இனி நாமும் மூன்றாம் பிறை அன்று சந்திரனை வழிபட்டு சிவபெருமானின் முழு அருளையும் பெறுவோம்.
