ஆரம்ப காலத்தில் இருந்தே எல்லா முருகப்பெருமானின் ஆலயங்களிலும் அவருடைய வேலை வைத்து தான் பக்தர்கள் வழிபட்டு வந்தார்கள். பின்னர் தான் மக்கள் முருகனின் திருவுருவத்தை சிலையாக செய்து வழிபாடு நடத்த ஆரம்பித்தார்கள். இப்பவும் திருப்பரங்குன்றம் பழமுதிர்சோலையில் முருகப்பெருமானின் வேலை வைத்து வழிபடும் வழக்கம் இருந்துவருகிறது.
கோவில்பட்டியை சேர்ந்த முருக பக்தர் ஒருவர் வணிகம் செய்வதற்காக இலங்கைக்கு சென்றிருந்தார். இலங்கையில் உள்ள கதிர்காம முருகன் ஆலயத்திற்கு சென்று அனுதினமும் முருகரை வழிபட்டு வந்தார். கதிர்காம முருகன் ஆலயத்தில் வேல் வழிபாடு தான் முன்னிலையில் இருக்கும். எனவே இந்த வணிகரும் ஒரு வேலை வாங்கிவைத்து தினமும் வழிபாடு நடத்தி வந்தார்.
ஒருகட்டத்தில் அவர் இலங்கைக்கு வந்த வேலை முடிந்துவிட்டது. இருந்தும் கதிர்காம முருகரை விட்டு பிரிவதை நினைத்து மிகவும் கவலை அடைந்தார். அந்த பக்தரின் கவலையை போக்க நினைத்த முருகர் வானத்தில் அசரீரி போல ஒலித்தார். பக்தா, உன்னுடைய பக்தியை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன். இந்த வேலை உன்னுடன் எடுத்து செல், இந்த வேலுக்குள் நான் வந்து சரணடைகிறேன். இந்த கதிர்காம முருகன் கோவிலில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துச் சென்று உன் ஊரில் உள்ள ஒரு மலைக்குன்றில் எனக்காக ஒரு ஆலயம் எழுப்பி வழிபடுங்கள். உன்னுடைய கவலை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஊர் மக்களின் கவலையை நான் போக்குகிறேன் என்று முருகர் சொன்னார்.
கோவில்பட்டிக்கு திரும்பிய அந்த பக்தர் சொர்ணமலை என்ற மலைக்குன்றில் கதிரேசனுக்காக ஒரு ஆலயம் எழுப்பினார். இன்றுவரை இந்த ஆலயத்தில் வேல் வழிபாடு தான் நடைமுறையில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வந்து கதிரேசனை வழிபட்டால் நாம் எண்ணிய காரியங்கள் உடனே கைகூடும். தீமை விலகும். கர்மவினைகள் நீங்கும். குடும்ப பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும். கிருத்திகை நாட்களில் இங்குள்ள வேலுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். அந்த அன்னாபிஷேகத்தில் கலந்து கொண்டு அங்கு கொடுக்கும் அன்னத்தை வாங்கி பெண்கள் சாப்பிட்டால் குழந்தை பேரு இல்லாமல் கஷ்டப்படும் பெண்களுக்கு அடுத்த வருடமே குழந்தை பிறந்த அதிசயம் நடந்துள்ளது.