நண்பர் ஒருவர் ஆன்மீகத்தில் அதீத நாட்டம் கொண்டவர். அவர் மட்டுமல்லாமல் அவர் குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அவர்கள் குடும்பம் கொஞ்சம் பெரிய குடும்பம். வயசான தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, 4 பசங்க, 2 பொண்ணுங்க என்று எல்லோரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்துவந்தார்கள். இந்த மொத்த குடும்பமும் நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
இவங்க வீடு நெடுஞ்சாலைக்கு பக்கத்துல இருந்தது. திடீரென நெடுஞ்சாலையில் ஒரு அம்மன் கோவிலை கட்டி நிர்வகிக்க தொடங்கினார்கள். அந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் எல்லா பக்தர்களும் அந்த கோவிலை வழிபடாமல் செல்ல மாட்டார்கள். எந்த விதமான விபத்துகளிலும் சிக்கக்கூடாது என்று எல்லோரும் அந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டுவிட்டு உண்டியலில் நிறைய காசு, பணம், நகை என்று பக்தர்கள் காணிக்கை செலுத்தி செல்வார்கள்.
இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த கோவிலின் உண்டியலில் உள்ள பணத்தை எடுத்து மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை வாழத் தொடங்கினார்கள். நடுத்தர வர்க்கமாக இருந்த அந்த குடும்பம் சில மாதங்களிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக மாறினார்கள். பின்னர் சில நாட்களிலேயே அந்த பெரிய குடும்பத்தில் தொடர்ந்து இறப்பு வந்துகொண்டே இருந்தது. தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், தம்பி என ஒவ்வொருவராக விபத்தில் இறக்க ஆரம்பித்தார்கள்.
அதுக்கு அப்புறம் தான் எல்லோருக்கும் புரிந்துள்ளது. இவர்கள் பக்திக்காக அந்த கோவிலை கட்டவில்லை, தாங்கள் ஆடம்பரமாக வாழவேண்டும் என்று அந்த கோவிலை கட்டியுள்ளனர் என்று. கடவுளின் மீது எவ்வளவு வேண்டுமானாலும் பக்தி காட்டலாம், அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அந்த கடவுளை வைத்து காசு சம்பாதிச்சு ஆடம்பரமாக வாழலாம் என்று நினைத்தால் இது தான் முடிவு என மக்கள் எல்லோரும் இப்போது பேச ஆரம்பித்துவிட்டார்கள்.