தற்போதைய காலங்களில் கடவுளுக்கும் காவிக்கும் முடிச்சுப்போட்டு அரசியல் பேசுகிறார்கள். காவி நிறத்தை ஏன் கடவுளுடன் தொடர்பு படுத்துகிறார்கள்? கடவுளையே எண்ணி வாழ ஒருவர் முடிவு செய்துவிட்டால் காவி நிற உடை தான் அணிய வேண்டுமா? வள்ளலார் வெள்ளைநிற உடையை தானே வாழ்க்கை முழுக்க உடுத்தினார். கடவுள் பாதையில் தன்னை முழுவதுமாக லயித்து கொள்பவர்கள் ஆடை பற்றியே சிந்திக்க மாட்டார்கள் அல்லவா? பிறகு எப்படி இந்த நிறம் கடவுளுடன் தொடர்புபடுத்தப்பட்டது?
பள்ளி புத்தகத்தில் திருவள்ளுவர் படத்தை பார்த்திருப்போம். அதில் அவரது தாடிக்கு வெள்ளைநிறத்தை பூசியிருப்பார்கள். இது ஓவியரின் சிந்தனை. இப்போதும் வள்ளுவரை நினைக்க, வெள்ளைத்தாடியுடன் உள்ள பள்ளி புத்தகம் தான் நினைவுக்கு வருகிறது. அப்படித்தான் இங்கேயும், பண்டைய காலத்தில் ஏதாவது ஞானி காவி நிறத்தை பயன்படுத்தி இருக்க வேண்டும். அதனை தொடர்ந்தே இந்த காவிநிறம் கடவுளுடன் தொடர்புபட்டிருக்கும்.
அதுமட்டுமின்றி பண்டைய காலத்தில் துணிகளுக்கு சாயம் ஏற்றம் பழக்கம் இல்லை. நாளடைவில் இந்த முறை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் வெள்ளைநிற உடை அழுக்காகாமல் இருக்க காவி நிறம் கொண்டு சாயம் ஏற்றி இருக்கலாம்.
இல்லையெனில், ஞானிகள் காலம்காலமாக காடுமேடு, மலைகளில் தியானம் செய்தவர்கள். அப்படி அமர்ந்து தியானம் செய்கையில் அவர்களது உடையில் மண் ஒட்டி, உடையை காவி ஆக்கியிருக்கலாம். அவர்களை பின்பற்றி இதற்கு பின் தோன்றியவர்கள் துறவறம் போவது அல்லது கடவுள் பற்று என்றாலே காவி நிற உடை தான் என்ற முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.