நம் வாழ்வில் நிறைய தெய்வங்கள் பற்றி தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். அந்த வகையில் நாம் அதிக அளவில் தெரிந்து வைத்திருக்காத ஒரு தெய்வம் தான் இந்த வராஹி அம்மன். யார் இந்த வராஹி அம்மன்? இவர் சிவபெருமானின் போர்ப்படை தளபதிகளில் ஒருவர். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவள் தான் இந்த வராஹி அம்மன். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்தே உதித்த காரணத்தால் நிறைய சக்தி நிறைந்த தெய்வமாக விளங்குகிறார்.
தமிழ்நாட்டில் வராஹி அம்மனுக்கு என்று பழமையான கோவில்கள் மூன்று இடத்தில்தான் அமைந்துள்ளது. அரக்கோணம் அடுத்த பளூரில் வராஹிக்கு கோவில் உள்ளது. இது மிகவும் பழமையான கோவில், இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் மங்கள வராஹி கோவில் உள்ளது. தஞ்சை அரண்மனையில் வராஹிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.
நம்மால் வாழ்வில் முடிக்கவே முடியாது என்று நினைக்கும் காரியங்களை நம் உடனிருந்து மனவலிமை கொடுத்து முடித்து வைப்பவள் தான் வராஹி அம்மன். தஞ்சை பெரிய கோவில் என்ற வரலாற்று சிறப்புமிக்க திருத்தலத்தை ராஜ ராஜ சோழன் கட்டிமுடிக்க இந்த வராஹி அம்மன் உதவினார் என்று வரலாறு கூறுகிறது. ராஜ ராஜ சோழன் வராஹி அம்மனின் மிகப்பெரிய பக்தர். அதன் காரணமாத்தான் வராஹி அம்மனுக்காக தஞ்சை அரண்மனையில் சன்னதி அமைத்துள்ளார்.
குழந்தை வரம், திருமண வரம், பில்லி சூனியம் போன்ற பிரச்சனைகளுக்கு வராஹி அம்மனை வழிபட்டால் உடனடியாக பலன்களை பெறலாம். வராஹி அம்மனை வழிபட பல அபிஷேகங்கள் செய்தாலும், அம்மனுக்கு பிடித்தது மாதுளம்பழம். மாதுளம்பழம் கொண்டு அம்மனை வழிபட்டு வந்தால் நம் குறைகள் தீர்ந்து வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் என்பது ஐதீகம்.