மனது நினைத்தால் முடியாதது என்பது எதுவும் இல்லை என்றவாறு பலர் அறிவுரை கூற கேட்டிருப்போம். அதுவும் குறிப்பாக தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு மனதின் வலிமை குறித்து வகுப்பு எடுப்பதை பார்த்திருப்போம். உண்மையில் மனம் என்பது சக்தி வாய்ந்த ஆயுதம் தான். அதன் சக்திகளை விளக்க ஒரு நிகழ்வை பகிர்ந்துகொள்கிறேன். நண்பர் ஒருவருக்கு ரோஜா பூ என்றாலே அலர்ஜி, அதன் அருகில் சென்றாலே தும்மல், கண்ணில் நீர் சுரந்து, முகம் சிவப்பாகி விடும். இதை அறிந்துகொண்டு ரோஜா பூவை தவிர்த்து வந்தார்.
ஒருநாள் அவரது அலுவலகத்தில் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது, மேசை முழுக்க ரோஜா பூக்களால் அலங்காரம் செய்து வைத்திருந்தனர். இவருக்கு அதிர்ச்சி, ஒரு பூவே நமக்கு எதிரி. இங்கு இத்தனை பூக்களா என ஆச்சர்யம் கலந்த பயத்தோடு அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமருகிறார். சில நொடிகளில் தும்மல் வந்துவிட்டது. முகம் சிவந்து போனது, கண்களில் நீர் வர ஆரம்பித்துவிட்டது.
திடீரென அங்கிருந்த ஒருபெண், இந்த பூக்களை பாருங்களேன்! ஒரிஜினல் பூக்கள் போலவே இருக்கிறது என கூறுகிறார். பிளாஸ்டிக் பூக்கள் எப்படியை அலற்சியை ஏற்படுத்த முடியும் என அவர் நினைத்த அடுத்த நொடியே அலற்சிக்கான அறிகுறிகள் காணாமல் போனது. இதுவே மனதின் சக்தி. எதையும் லேசாக எடுத்துக்கொண்டால் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களும் நமக்கு சாதகமாக இருப்பதாக உணர்வோம். இதையே நேர்மறையான எண்ணங்கள் என்கிறோம். 'நீ என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்' என்பதிலே எண்ணங்களின் வலிமை புரிந்திருக்கும்.