தகவல்கள்

வெற்றிலையை ஏன் அடியையும் நுனியையும் கிள்ளிவிட்டு பயன்படுத்துகிறார்கள்? சிவபெருமானே பயந்து கிள்ளி எடுக்கும் போது, நாமெல்லாம் என்ன?

Sep 27 2021 04:38:00 PM

வெற்றிலை என்பது தமிழர் பண்பாட்டுடன் இணைந்தே வலம் வருகிறது. எந்த ஒரு விஷேசத்திற்கு சென்றாலும் விருந்து முடிந்த பிறகு வெற்றிலை சாப்பிட்டால் மட்டுமே பலருக்கும் விருந்து உண்ட திருப்தி கிடைக்கும். அது மட்டுமின்றி கடவுளுக்கு பூஜை செய்வது முதல் திருமணத்திற்கு அழைப்பது வரை வெற்றிலை இல்லாமல் ஒரு வேலையும் ஆகாது. அதுமட்டுமா, நம்ம ஊர் படங்களில் மந்திரவாதி என்றாலே, வெற்றிலையில் மை போட்டு பார்த்தால் மட்டுமே மந்திரவாதி என ஒப்புக்கொள்வோம். சரி, இந்த வெற்றிலையில் நுனியையும் அடியையும் கிள்ளிவிட்டு சாப்பிடும் பழக்கம் எப்படி வந்தது என பார்ப்போம்.

sivaperuman batal-leaf

இதற்கு ஒரு கதையே உள்ளது. சிவபெருமான் உணவு உண்டதும் வெற்றிலை போட வேண்டும் என உமாதேவியாரிடம் சொல்லிக்கொண்டிருந்தாராம். அதை கழுத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த நாகமானது, சிவபெருமானுக்கு சேவை செய்ய வேண்டும் என எண்ணி சரசரவென கீழே இறங்கி, வெற்றிலையை வாயில் பறித்துக்கொண்டு வந்து சிவபெருமானின் முன்னே போட்டதாம். அதை பார்த்த சிவனுக்கும் பார்வதிக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லையாம். இருந்தாலும் நாகத்தின் பக்தியை எண்ணி, கொண்டுவந்த வெற்றிலையை நுனியையும் அடியையும் கிள்ளிவிட்டு கழுவி சாப்பிட்டாராம். என்னயிருந்தாலும் நாகம் விஷம் அல்லவா? அதற்காகவே இவ்வாறு செய்ததாக கூறுகின்றனர். 

sivaperuman batal-leaf

இது மக்கள் கூறும் கதை. உண்மையில் வெற்றிலையின் நுனிப்பகுதிகள் எளிதில் அழுகக்கூடியவை என்பதால் தான் இவ்வாறு செய்வதாக கூறுகின்றனர். மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யும்போது கூட, கூடைகளில் தண்ணீர் தெளித்து விற்பது தான் வழக்கம். காரணம் எளிதில் அழுகிவிடும் என்பதற்காக. இவ்வாறு தான் நுனியையும் அடிப்பகுதியையும் கிள்ளிவிட்டு சாப்பிடும் பழக்கம் மக்களுக்கு வந்தது. அதுமட்டுமில்லாமல் வெற்றிலையை விளைவிக்கும்போது நுனிப்பகுதிகளில் அதிகமாக பூச்சிகளின் தாக்குதல் இருப்பதால் தான், நுனிப்பகுதியை வெட்டிவிட்டு சாப்பிடுவது நல்லது என கூறுகின்றனர்.