பொதுவாக சிதம்பரம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது நடராஜர் தான். எண்ணிலடங்கா ரகசியங்களை கொண்ட சிதம்பரம், சிவபெருமானின் பஞ்சபூத திருத்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்குகிறது. அது மட்டுமல்ல நடராஜரை சிலையில் இருக்கும் ரகசியங்களை சொல்ல இந்த பிறவி போதாது என்று கூறுகிறார்கள் மகான்கள். அவற்றுள் தற்போது நாம் காண இருப்பது நடராஜரின் "ஆனந்த தாண்டவம்"
சிவதாண்டவம் என்பது சிவபெருமான் அதீத ஆனந்தத்தில் அல்லது கடுமையான உக்கிரத்தில் ஆடும் ஒருவகை ஆடல் கலை. ஆடல் கலையின் நாயகனாக திகழ்பவர் நமது சிவபெருமான். இவர் ஆடும் சபைகளில் மிகவும் முக்கியமான சபையாக இருப்பது நமது சிதம்பரம் பொற்சபை. இதில் மிகப்பெரும் சிறப்பு என்னவென்றால், இங்கு எம்பெருமான் ஆடும் தாண்டவம் "ஆனந்த தாண்டவம்" என்று போற்றப்படுகிறது. இறைவன் மிக மகிழ்ச்சியாக ஆடுவதால் தான் இதற்கு இந்த பெயர் வந்தது.
பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவரும் எம்பெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து, அதன் பலனாக மனமுவந்த ஈசன், பேரானந்தத்தில் ஆடியது தான் இந்த தாண்டவம் என்று தல வரலாறு கூறுகிறது. இந்த ஆனந்த தாண்டவ கோலத்தில் இருப்பவர் தான் நடராஜ பெருமான். நடனத்தின் நாயகரே இவர்.
இந்த ஆனந்த தாண்டவம் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளால் ஆகிய ஐந்தொழில்களை இயற்றும் தாண்டவம் எனவும், பிரபஞ்ச இயக்க நடனமாகவும் போற்றப்படுகிறது. இதை எம்பெருமான் காலை வேலையில் ஆடியதாக சொல்லப்படுகிறது. இதில் உள்ள ரகசியம் என்னவென்றால், இடதுகாலை தூக்கி வலது காலை ஊன்றி பெருமான் காட்சியளிப்பார். அவரது வலது பெருவிரல் உலக கந்தபுலத்தின் மையப்பகுதியாக சொல்லப்படுகிறது.