செவ்வாய்க்கிழமை முருகனுக்கு ரொம்பவும் பிரசித்தி பெற்ற நாள். வாரவாரம் அந்த தினத்தில் முருகனை தரிசிப்பதில் ஆத்ம திருப்தி கிடைக்கிறது. எந்த வேலை இருந்தாலும், செவ்வாய்க்கிழமை காலையிலோ, மாலையிலோ தவறாமல் சென்றுவிடுவது வழக்கம். வாய்ப்பு கிடைத்தால் குடும்பத்தோடு செல்வோம். வேலை பளு அதிகம் உள்ள நாட்களில், நான் மட்டும் தனியாக சென்றுவிட்டு சீக்கிரம் வந்துவிடுவேன். கோவிலுக்கு செல்லும் பழக்கம் உருவானதில் இருந்து, மனம் இலகுவாக இருப்பதை உணர்கிறேன்.
ஈரோடு பக்கம் சென்னிமலை முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. அருகிலேயே சிவன் மலையும் உண்டு. சிவன் மலை என்றவுடனே, அங்கு மூலவர் சிவனாக இருப்பார் என்று நினைத்துவிட வேண்டாம். மலையின் பெயர் மட்டும் தான் சிவன் மலை. அங்கும் மூலவர் முருகப்பெருமானே. இந்த இரண்டு ஸ்தலங்களையும் ஒரே நாளில் தரிசித்துப்பாருங்கள். மனதுக்குள் புதுசா ஒரு புத்துணர்வு வந்த மாதிரி இருக்கும். கோவிலுக்கு தனியாக செல்லும் நாட்களில், முருகனை தரிசித்தவுடன் அவசர அவசரமாக கிளம்பிவிடுவேன்.
குடும்பத்தோடு சென்றால் மட்டுமே, சாமி கும்பிட்ட பிறகு சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வருவோம். நான் செய்வதை கவனித்துக்கொண்டிருந்த, எனக்கு தெரிந்த கோவில் குருக்கள், "இப்படியெல்லாம் சாமி விஷயத்தில் அவசரப்படக்கூடாது. நானும் பார்க்கிறேன், நீங்க தனியா வரும் போதெல்லாம், எப்போ கோவிலை விட்டு ஓடுவோம் என்பது போலவே பரபரப்பா இருக்கீங்களே" என்று உரிமையுடன் கண்டித்தார். வேலை அப்படி சாமின்னு நான் சொல்ல, "அது அப்படி கிடையாது. சில உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்" என கூறினார்.
கோவிலுக்குள் சென்ற உடனே கண்ணுக்கு தெரியாத கடவுளின் தூதர்கள் நமக்கு வழிகாட்ட ஆரம்பிக்கின்றனர். கோவிலில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, அவர்களிடமிருந்து விடைபெற கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்க வேண்டும். தெய்வத்தின் கட்டளையை நிறைவேற்ற காத்திருக்கும் தூதர்களே, எங்களது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என மனதார நினைத்து, சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்த பிறகே கோவிலை விட்டு வெளியேற வேண்டுமாம். இது தெரியாமல், சாமி கும்பிட்ட உடனே, அறக்க, பறக்க ஓடியிருக்கிறேன் இவ்வளவு நாட்களாக.