வீட்டில் வைத்து பூஜை செய்யும் எந்த பொருளும், அதாவது லிங்கம், பஞ்ச உலோக உருவங்கள், வேல் எதுவுமே ஆறு அங்குலங்களுக்கு மேல் இருக்க கூடாது என்பது பெரியவர்களின் கருத்து. அப்படி இருந்தால் அவைகளை கோவில்களில் கொடுத்து விட வேண்டும். எவ்வளவுதான் வீரதீரம் பொருந்தியவன் ஆயினும் தாயாருக்கு முருகன் குழந்தைதான். அதனால் சூரா பதுமன், தாரகாசுரன், சிம்ம வக்த்ரன் (சிங்க கழுத்து) போன்ற அரக்கர்களை தன் குழந்தை எதிர் கொள்ள முடியாது.
இதனை உணர்ந்த அன்னை காந்திமதி, தன் உடல், உள்ளம், ஆவி எல்லாவற்றிலும் உள்ள சக்தியை திரட்டி வேலாக மாற்றி கந்தனிடம் கொடுக்கிறாள். வட மொழியில் வேலுக்கு "சக்தி ஆயுதம்"என்ற பெயர் உண்டு. அதனால் வேல் (சக்தி ஆயுதம் ) அன்னை மீனாட்சி, அன்னை காந்திமதியின் இன்னொரு உருவமாகும். மூர்த்திகளுக்கு உண்டான மரியாதை வேலுக்கும் அதிகமாகவே உண்டு. அதனால் தான் 6 அங்குலங்களுக்கு மேலதிகமான வேலினை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது என்கின்றனர்.
முருகப்பெருமானின் கையில் உள்ள வேல் மகத்துவமானது. அந்த வேலுக்கு அற்புதமான அபார சக்தி உண்டு. வேல் வழிபாடு சிறந்ததொரு பலனை கொடுப்பதாக நிறைய பேர் சொல்லி இருக்காங்க. திருப்பரங்குன்றத்தில் மூலவர் குடவரை மூலம் உருவாக்கப்பட்டதால், அதற்கு அபிஷேகம் கிடையாது. அதற்கு பதில் வேலுக்குதான் அபிஷேகம் நடைபெறும் என்றால் அதன் சிறப்பை பார்த்துக்கொள்ளுங்கள். சிறிய அளவிலான வேலினை, நாம் வீட்டில் வைத்து பூஜிக்கலாம்.
விக்கிரகங்களை வீட்டில் வைத்து வழிபடுவது போன்ற நியதி எல்லாம் கிடையாது. பூஜை அறையில் வைத்து வணங்கி வரலாம். வேல் ஐம்பொன்னாலோ, வெள்ளி, பித்தளை, செம்பு ஆகிய உலோகத்தாலோ செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் ஒன்று கண்டிப்பாக இரும்பு, எவர் சில்வர், அலுமினியம் போன்ற உலோகத்தால் செய்யப்பட்டிருக்கக் கூடாது.