அம்மன் கோவில் விசேஷங்களில் பெரும்பாலும் முளைப்பாரி சுமக்கும் சம்பிரதாயம் இருக்கும். நவதானியம் கொண்டு தான் முளைப்பாரி வளர்ப்பார்கள். கன்னிப்பெண் விரதம் இருந்து முளைப்பாரி எடுத்தால், நல்ல கணவர் கிடைப்பார். முளைப்பாரி போலவே வீட்டில் செல்வமும் செழித்திருக்கும் என இப்படி பல நன்மைகள் முளைப்பாரி சுமப்பதால் கிடைக்கும் என ஊர் பெரியவர்கள் சொல்வார்கள். எங்க ஊர்ப்பக்கம் கன்னி பெண்கள் போட்டி போட்டுகொண்டு முளைப்பாரி வளர்ப்பார்கள். இளம் பெண்கள் இந்த சடங்கிற்காக முந்தைய தினம் ராத்திரி முதலே தூங்காமல் காத்திருப்பார்கள். அதெல்லாம் பார்க்கவே அழகாக இருக்கும்.
சிலர் இந்த முளைப்பாரியை ஆற்றில் கரைத்து விடுவார்கள். சில ஊர்ப்பக்கம் முளைப்பாரியை ஆற்றில் அலசி அதில் கொஞ்சம் சொந்தங்களுக்கு கொடுத்துவிட்டு, மீதியுள்ளதை தலையில் வைக்க சொல்வார்கள். காய்ந்த பின்னர் அதனை வீட்டு கூரையில் வீசிவிடுவதுண்டு. காலில் மிதிப்பட கூடாது.
வெறும் சடங்கு சம்பிரதாயம் என்பதை தாண்டி, முளைப்பாரி வளர்ப்பதற்கு வலுவான காரணம் உண்டு. அந்த காலத்தில் பெரும்பாலும் விவசாயம் தான் பிரதான தொழில். அப்போது விவசாயத்திற்கு பயிரிடும் விதைகளை நேரடியாக நிலத்தில் விதைக்காமல் வீட்டில் உள்ள சிறு தொட்டியில் வளர்க்க ஆரம்பித்தனர். பத்து நாட்கள் அதனது வளர்ச்சியை பார்ப்பார்கள், நன்றாக செழிப்பாக வளர்ந்துள்ளது எனில் விளை நிலத்தில் பயன்படுத்துவார்கள். இதனால் முன்னதாகவே விதைகளை நிலத்தில் போட்டு ஏக்கர் கணக்கில் விதை நஷ்டமடைவது குறைக்கப்படும்.
அது ஏன் கோவில் சடங்காக மாற்றப்பட்டது என்றால், ஊரின் மகசூலை கணிக்க வேண்டும். ஊர் மக்கள் பொதுவாக ஒன்று கூடுவது, கோவில் விழாக்களில் மட்டும் தான். அதனாலே அம்மனுக்கு முளைப்பாரி எடுக்கும் சடங்காக பின்பற்றப்பட்டு, எல்லா முளைப்பாரியும் ஒரே இடத்தில் வைத்து அந்த ஆண்டு மகசூலை கணித்தார்கள்.