முருகன் கோவிலுக்கு மாலை போடுபவர்கள் முதல் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுபவர்கள் வரை அனைவரும் அணியும் உடை காவி நிறம். சித்தர்கள், முனிவர்கள், கோவில் குருக்கள் என ஆன்மீகம் தொடர்புடைய அனைவரும் அணியும் ஆடையின் நிறம் தான் இந்த காவி. காவிக்கும் ஆன்மீகத்திற்கும் என்ன தொடர்பு? ஏன் ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்கள் காவி உடையை அணிகிறார்கள்?
நாம் ஒரு செயலை செய்யும் முன்னர் நாம் அணியும் உடையை கவனமாக தேர்வு செய்வோம். ஒரு பெண்ணிடம் காதலை சொல்லச் செல்லும் ஒருவர் பிங்க் நிற உடையையே விரும்புவார். அதுபோல் ஒரு திருமணத்திற்குச் செல்லும்போது மங்களகரமான உடையையே அனைவரும் அணிந்து செல்வார்கள். ஒரு ஈ ம ச் ச ட ங் கிற்கு செல்லும்போது கருப்பு நிற உடையை அணிவதை நாம் அனைவரும் வழக்கமாக கொண்டுள்ளோம். அதுபோலவே ஆன்மீக வாதிகளும் காவியையே விரும்பி அணிகின்றனர்.
காவி புதிதாக ஒன்றை நமக்கு உணர்த்துகிறது. உதித்துக்கொண்டிருக்கிற கதிரவன் காவி நிறம். கதிரவன் உதிப்பதை போல காவி நம் வாழ்வில் உதிக்கிறது. காவி அணிகின்ற மனிதன் தன் வாழ்நாளில் தனது அனைத்து பழக்கவழக்கங்களையும் உதிர்த்து விடுகிறான். அனைத்திலும் ஒரு புதிய வாழ்க்கைக்கு மாறி விடுகிறான்.
காவி நிறம் கனிவதற்கான அடையாளம். உலகில் கனியும் அனைத்து பழங்களும் காவி நிறத்தை அடைகின்றன. அதுபோலவே மனிதன் தன் வாழ்நாளில் கனிந்து முதிர்ச்சி அடைந்த பின்னர் காவி உடை அடைந்து ஆன்மீகத்தில் ஈடுபடுகிறான். இதன் காரணமாகத்தான் ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்கள் காவி உடை அணிகின்றனர் என்று சொல்கிறார்கள்.