பொதுவாகவே நமது வீடுகளிலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி, நாம் எப்போதும் வேண்டுவது, "கடவுள் நம்முடன் இருந்து நம்மை காக்க வேண்டும்" என்பது தான். அது சரி கடவுள் நம்முடன் இருக்கிறார் என்றால் அவரது படங்களோ, டாலர்களோ அல்லது விக்கிரகமோ எப்போதும் நம்முடன் வைத்துக்கொள்வது என்று அர்த்தம் அல்ல. ஆத்மார்த்தமான ஒரு உணர்வு மட்டுமே அவர் நம்முடன் இருப்பதை உணர்த்தும். அப்படி என்ன உணர்வுகள்?
கோவில்களுக்கு செல்லும்போதும், வீடுகளில் பூஜையறையில் இருக்கும்போதும், உங்களை அறியாமல் மனம் பரவசப்பட்டு கண்களில் கண்ணீர் பெருகுகிறது என்றால், கடவுள் உங்களுக்கு மிக அருகில் இருக்கிறார். உங்களது மனக்குறைகளை காதில் வாங்கிக்கொள்கிறார் என்று அர்த்தம்.
உங்கள் மனம் மிகவும் குழம்பி என்ன செய்வதென்று தெரியாமல் நீங்கள் ஸ்தம்பித்து நிற்கும் வேலையில், ஏதேனும் ஒரு அசரீரி போல உங்களை யாராவது வழிநடுத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா? கடவுள் உங்களை வழிநடுத்துகிறார் என்று அர்த்தம்.
யாரும் உங்களுக்கு இல்லை என்ற உணர்வு உங்கள் மனதில் விரக்தியை ஏற்படுத்தும்போது, சரி கோவிலுக்காவது செல்லலாம் என்ற உணர்வு வருகிறதா? இப்போது கடவுள் உங்களை தனக்கு அருகில் அழைக்கிறார் என்று அர்த்தம்.
உங்கள் தனிமையில் நீங்கள் செய்த பாவ புண்ணியங்களை உங்கள் நினைவில் கொண்டுவந்து, நீங்கள் செய்த காரியம் சரியா? இல்லை தவறா? என உணர்த்துவது வேறு யாருமல்ல கடவுள் தான்.
எனவே கடவுளை படமாகவோ, விக்ரகமாகவோ இல்லை டாலர்களாகவோ பகட்டுக்கு அணியாமல் உள்ளார்ந்த பக்தி உணர்வோடு தேடிப்பாருங்கள், உங்கள் அருகில் அவரை உணரலாம்.