"கடவுள் ஏன் கல்லானார்,மனம் கல்லாய் போன மனிதர்களாலே" என்ற பாடல் நாம் அனைவரும் கேட்டிருப்போம். எல்லா கோவில்களிலும் கடவுள் சிலைகள் கற்சிலைகளில் தான் இருக்கும். அதற்கு என்ன காரணம்? கல் மிகவும் விலை மலிவானது, அதனால் தான் கற்சிலைகளில் கடவுளை வடிவமைக்கிறார்கள் என்று நாம் நினைப்போம். தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற பொருட்களை விட கல்லிற்கு மிக அதிக சக்தி உள்ளது.
நாம் சாதாரணமாக ஒரு சின்ன கோவிலுக்கு சென்றாலும் நமக்கு ஒரு வித மன அமைதி கிடைக்கும். அந்த கோவிலின் உள்ளே கால் எடுத்து வைத்தவுடன் நம் அனைத்து பிரச்சனைகளையும் மறந்து நம் மனம் அமைதி ஆவதற்கு காரணம் அந்த கற்சிலைகள் தான். கற்சிலைகள் கோவிலில் உள்ள அனைவரின் மனதையும் சாந்த நிலையை அடைய உதவுகிறது.
வீடுகட்டுவதற்கு வாஸ்து என்ற ஒன்று இருப்பது போல கோவிலில் சிலைகளை வடிவமைப்பதற்கும் சில ஆகம விதிகள் உள்ளன. அந்த விதிமுறைப்படி கோவிலில் சிலைகளை வடிவப்பதால் அந்த கடவுள் சக்தி பெற்று நமக்கு மன அமைதியை கொடுக்கிறார். கோவிலில் உள்ளே நுழைந்த வுடன் நம் உடலில் ஒருவித சக்தி ஊடுருவதும் இதனால் தான்.
தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகப் பொருட்களை விட கல்லிற்கு சக்தி மிக அதிகமாக உள்ளது. நல்லதோ, கெட்டதோ அனைத்து விதமான சக்திகளையும் தன்னிடம் ஈர்க்கும் பண்பு கல்லிற்கு உள்ளது. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என ஐம்பூதங்கலின் தன்மையை கல் கொண்டுள்ளது. உலகில் வேறு எந்த உலோகத்திற்கும் இந்த சக்தி கிடையாது. கல் பூமியில் நிலத்தில் கிடக்கிறது. இதனால் நிலத்தின் தன்மை கொண்டுள்ளது. கல்லில் இருந்து நீர் உருவாகி அருவி உண்டாகிறது. கல் எப்பேற்பட்ட வெப்பத்தையும் இழுத்து குளிர்ச்சியை வெளியிடும் தன்மை கொண்டுள்ளது. இதனால் நீருக்கான சக்தியும் அந்த கல்லிடம் உள்ளது.
ஆகாயத்தில் இருந்து ஒலியை இழுத்து ஆலயங்களில் ஒலிகளை எழுப்புகிறது. இதனால் நாம் கோவில்களில் பேசும்போது எதிரொலிப்பதை காணலாம். இரண்டு கற்களை உரசும்போது தீ உண்டாவதால் நெருப்புக்கு உண்டான சக்தியையும் கல் கொண்டுள்ளது. கல்லில் வாழும் உயிரினம் தேரை. அப்படி கல்லில் தேரை உயிரோடு வாழ்வதால் கல்லில் காற்று உள்ளது என்று அர்த்தம்.
இப்படி ஐந்து பூதங்களை கல்லில் அடக்கி உள்ளதால் அந்த கல்லில் நாம் சிலைகள் செய்யும் போது கல் சக்தி பீடமாக விளங்குகிறது. இதன் காரணமாகவே நம் முன்னோர்கள் கற்சிலைகளில் கடவுள் செய்து வழிபட வேண்டும் என்று நமக்கு கூறிவிட்டு சென்றுள்ளனர்.