நம் மக்களை பொறுத்த வரைக்கும், ஒரு பொய்யுடன் கொஞ்சம் மத சாயத்தையும் பூசி பரவவிட்டால், அது உண்மையாகி விடும். சில வருடங்களுக்கு முன்பு ஒரு நோட்டீஸ் பலரது கைகளுக்கு வந்திருக்கும். அதில், "இந்த செய்தியை பத்து பேரிடம் சொல்ல வேண்டும். அப்படி சொல்லாமல் அலட்சியமாக இருந்து, ஒருவர் பாம்பு கடித்து இறந்தார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பார்க்க கோவில் நோட்டீஸ் போல இருந்ததால், பலரும் உண்மையென நம்பி பகிர்ந்ததை காண முடிந்தது.
இப்போ பரவும் வாட்ஸ்ஆப் பார்வோர்ட் மெசேஜ்களுக்கு எல்லாம் ஹெட்மாஸ்டர் அந்த நோட்டீஸ். போக போகத்தான் அது வதந்தி என்பது மக்களுக்கு புரிந்தது. ஒரு தகவல் இன்னொருவர் காதை சென்றடையும் போது, அது எப்படியெல்லாம் மாற்றமடையும் என்பதை நம்ம ஊரை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியான ஒன்று, "தஞ்சாவூர் கோபுர நிழல், தரையில் விழாது" என்று பரவி வரும் தகவல். தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமானத்துக்கு உலகின் எந்த கட்டிடக்கலையும் ஈடுகொடுக்காது என்பது உண்மை என்றாலும், அதை வைத்து பரவி வரும் சில வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும்.
தஞ்சை பெரிய கோவிலின் நிழல் தரையில் விழாது என்று அப்பா எனக்கு சொன்னது. அங்கு செல்லாத வரைக்கும், அப்பா சொன்னது தான் உண்மை என்று நம்பி வந்தேன். ஒரு நாள் தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லும் போது, அப்பா சொன்னது நியாபகத்துக்கு வந்தது. கோவிலை சுற்றிலும் கவனித்து பார்த்தேன். நிழலை காணவும் முடிந்தது. அந்த இடத்தில் எதிர்மறையாக நினைக்க தோன்றியது. இந்த எண்ணம் வருவதற்கு காரணம், ஒரு வதந்தி என் மனதில் விதைக்கப்பட்டு, அது பொய் என தெரிய வந்ததே. இதே போல் மற்றவர்களுக்கும் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த பதிவு.
இதைப்பற்றி நண்பர்களிடம் சொன்னபோது, "உச்சி வெயிலில் விழாது" என்றனர். உச்சி வெயில் என்பது சூரியன் நேராக, நம் தலைக்கு மேலே நிற்கும் நிலை. அப்படி இருக்கும்போது, கூம்பு போன்ற வடிவுடைய எந்தவொரு பொருளின் நிழலும் கீழே விழாது. உதாரணத்துக்கு எகிப்தின் பிரமிட் நிழலும் உச்சி வெயிலில் கீழே விழாது. அவ்வளவு தான் இதில் விந்தை. மற்ற படி, தஞ்சை பெரிய கோவிலின் நிழல் பூமியில் விழும். விழாது என்று பரவி வரும் தகவல் உணர்ச்சிபூர்வ வதந்தி என்பது விளங்குகிறது.